×

சின்னாளபட்டியில் சிதிலமடைந்த நிலையில் சலவைத்துறை கூடம்: புதுப்பித்து தர கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள அண்ணா சலவைத்துறை கூடத்தை புதுப்பித்து தர வேண்டும் என அச்சமுதாயத்தினர், கூட்டுறத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சின்னாளபட்டி பிரிவு பகுதியில் மதுரை- திண்டுக்கல் சாலையில் 1972ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது அறிஞர் அண்ணா சலவைத்துறை கூடம்.  திண்டுக்கல், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்த போது முன்னாள் திமுக  எம்எல்ஏ நாச்சியப்பன் தலைமையில், மதுரை மாவட்ட கலெக்டர் சீதாராமதாஸ் இச்சலவை கூடத்தை திறந்து  வைத்தார். இங்கு அச்சமுதாய மக்கள், சின்னாளபட்டி ஊரில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் துணிகளை கொண்டு வந்து, அதனை துவைத்து, தேய்த்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். சலவைத்துறை அருகேயுள்ள ராணிமங்கம்மாள் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து துவைத்து வந்த சலவை பணியாளர்கள் நீர்வரத்து குறைந்த உடன் அப்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சராக ஐ.பெரியசாமியிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சலவைத்துறை கட்டிடம் 1972ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதால் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக வெள்ளாவி, தேய்க்கும் இடம் மிகவும் பழுதடைந்து உள்ளது.  இதுதவிர சலவைத்துறைக்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். சலவைத்துறையை காலி செய்யும் நோக்கோடு, சலவைத்துறை அருகே குப்பைக் கழிவுகளை கொட்டுவது, சலவைத்துறை கட்டிடத்தை இடிப்பது போன்ற மக்கள்விரோத செயல்களை செய்து வருகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக வளம்மீட்பு பூங்காவிற்கு எடுத்து செல்லாமல் சலவைத்துறை அருகேயுள்ள குளக்கரையில் கொட்டுவதால் குளத்து நீர் மாசடைந்து வருகிறது. எனவே சலவைத்துறை கூடத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைகள் கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் கண்டுக்கவே இல்லை
அண்ணா சலவை தொழிலாளர் முத்துப்பாண்டி கூறுகையில், ‘1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டு வழங்கிய இந்த சலவைத்துறை தான் எங்கள் சமுதாய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் சலவைத்துறை கூடத்தை புதுப்பித்து தர முயற்சி செய்யவில்லை. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, எங்கள் சமுதாய மக்களின் நலன் கருதி சலவைத்துறை கூடத்தை புதுப்பித்து தருவதோடு காம்பவுண்ட் சுவர் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் குளக்கரையில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்.

எங்கள் வாழ்க்கை இன்னும் அழுக்காத்தான் இருக்கு
சலவை தொழிலாளி கருப்பாயி கூறுகையில், ‘சுமார் 2 ஆயிரம் பேர் இந்த சலவைத்துறையை நம்பிதான் உள்ளனர். ஊர்மக்கள் அணியும் ஆடைகளை துவைத்து பளிச்சென ஆக்கி கொடுக்கும் எங்களின் வாழ்க்கை இன்னும் அழுக்காகத்தான் உள்ளது. எங்களின் வாழ்வாதார  இடத்தை காப்பாற்ற போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, எங்கள் சமுதாய மக்களின் நலன் கருதி சலவைத்துறையை புதுப்பித்து கொடுப்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சலவைத்துறை இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி
சமூகஆர்வலரும், ராமஅழகர் கோயில் நிர்வாகியுமான அமர்நாத் கூறுகையில், ‘சலவைத்துறைக்கு அருகே உள்ள மங்கம்மாள் குளம் தான் ராமஅழகர் கோயில், ஏடிஎஸ் நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் குளக்கரையில் பிளாஸ்டிக்- குப்பை கழிவுகளை கொட்டுவதை நிறுத்துவதுடன், குளத்தையும் தூர்வாரி கொடுக்க வேண்டும். மேலும் சலவைத்துறை இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : Chinnalapatti , Dilapidated laundry hall at Chinnalapatti: Renovation requested
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...