×

விராலிமலை முருகன் மலைக்கோயில் பாதையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

விராலிமலை: அறுபடை வீடுகளுக்கு இணையாக கருதப்படும் விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு மேலே எளிதாக சென்றுவர ரூ.3.80 கோடி திட்ட மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மலைப்பாதை திறக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. மேலும் நிர்வாக ஒப்புதலில் கோடிடப்பட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் பக்தர்கள் பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஒருவித அச்சத்துடன் மலையேறி சென்று வழிபாடு நடத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.மேலும் 50 சதவீதம் மட்டும் முடிக்கப்பட்டுள்ள லிப்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு பிப்ரவர் 26 ம் தேதி பாதி பணிகள் முடிந்த நிலையில் அவசர அவசரமாக அப்போதைய ஆட்சியாளர்களால் பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. விராலிமலை முருகன் மலைக்கோயில் மேலே செல்லும் தார்சாலை, அடிவாரத்தில் இருந்து மலைமேல் உள்ள இடும்பர் கோயில் வரை சுமார் 360 மீட்டர் நீளத்தில் 7 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட இந்த தார்சாலை முடியும் இடத்தில் வாகன நிறுத்த பகுதியில் இருந்து வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் 2 லிப்ட் அமைக்கப்பட்டு ஒரு லிப்ட்டில் 13 பேர் வரை பயணம் செய்யும் வகையிலும் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது. சுமார் 3.80 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட மலைப்பாதை பணிகள் அப்போது வெறும் தார்சாலை மட்டும் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு திறக்கப்பட்டது.

நிர்வாக ஒப்புதலில் பெறப்பட்ட மற்ற பணிகளான பக்தர்களின் வாகனங்கள் பாதுகாப்புடன் சென்று வருவதற்கு சைடு கட்டைகளை உயர்த்தி இரும்பு பைப்புகள் அமைத்தல், பேவர் பிளாக் பதித்தல், கழிவு நீர் வடிகால் அமைத்தல், லிப்ட் கட்டடம், லிப்ட் மற்றும் தார்சாலை ஓரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் இருப்பது பக்தர்களின் ஆபத்தான பயணத்தை உறுதி செய்யும் விதமாக உள்ளது. மாலை, இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டாக இருப்பதை பயன்படுத்தி பக்தர்கள் போர்வையில் சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். வருடம் முழுவதும் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி, உள்நாட்டு ரொக்கம் என பல லட்சங்களை உண்டியல் வசூல் மூலம் அள்ளித்தரும் விராலிமலை மலைக்கோயிலை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டு தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தத்தாரருக்கு அறிவுறுத்தி மலை மீது சென்று வழிபாடு நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : Viralimalai Murugan hill temple , Viralimalai Murugan hill temple route will be electric light?: Expectation of devotees
× RELATED விராலிமலை முருகன் மலைக்கோவிலில் கல்லூரி மாணவர்கள் உழவாரப்பணி