முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது, வேகமாக குணமடைந்து வருகிறார் : மருத்துவமனை அறிக்கை!!

சென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘இன்று (12ம் தேதி) உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’’ என்று கூறி இருந்தார்.

இரண்டு நாட்களாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி இருந்தனர்.இந்நிலையில், நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவிரி மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: