×

தாம்பரம் கடப்பேரி பகுதியில் ஆதிதிராவிடர் நல பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி; டி.ஆர்.பாலு எம்.பி வழங்கினார்

தாம்பரம்: தாம்பரம் அருகே, ஆதிதிராவிடர் நல பள்ளி கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் நிதியுதவியாக டி.ஆர்.பாலு எம்.பி வழங்கினார். தாம்பரம் - திருநீர்மலை சாலையில் கடப்பேரி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கடந்த 1998ம் ஆண்டு டி.ஆர்.பாலு எம்.பி துவக்கி வைத்தார். பின்னர், 2001 - 2002ல் தென் சென்னை எம்.பியாக டி.ஆர்.பாலு இருந்தபோது, அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த பள்ளியில் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால், பள்ளி கட்டிடங்கள், இருக்கை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. கழிவறை வசதி இன்றி, மாணவர்கள் அவதிப்பட்டனர். மேலும், இங்கு  விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் பள்ளி கட்டிடங்களுக்கு நடுவே சாலை செல்வதால், மாணவர்களுக்கு அது இடையூறாக இருந்தது. இப்பள்ளியில், சரியான கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாததால், கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்யாண் நகர், சேலையூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதி மாணவர்கள் எளிதில் பள்ளிக்கு சென்று படிக்க வசதியாக அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டிடம் அமைத்து தர கோரியும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, மேயர் வசந்தகுமாரி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை பராமரிக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடப்பேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளியின் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் கட்டமாக ₹50 லட்சத்தை ஒதுக்கி உள்ளார்.
இதற்கான ஆவணங்களை அவர் நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரிகமலக்கண்ணன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது, காரப்பாக்கம் எம்எல்ஏ கணபதி, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



Tags : Adi Dravidar Welfare School ,Tambaram Kadapperi ,DR ,Balu MP , Rs.50 lakhs for construction of Adi Dravidar Welfare School in Tambaram Kadapperi area; Presented by DR Balu MP
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!