அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையில் உள்ள கட்டி அகற்றம்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சாதனை

சென்னை: அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையில் உள்ள கட்டியை அகற்றி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கீழ ஈரால் பகுதியை சேர்ந்தவர் பச்சை பாண்டியன். இவரது மனைவி பொன்னுதாய் (56). இவருக்கு கடந்த சில நாட்களாக தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, இவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், இவருக்கு குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுத்தாய்க்கு மூளையில் சிறிய கட்டி இருப்பதை கண்டுப்பிடித்தனர். பின்னர், அறுவை சிகிச்சையின்றி  ‘எஸ்ஆர்எஸ்’ எனும் உயர் தொழில்நிட்ப கதிர்வீச்சு  மூலம் சிகிச்சை அளித்து கட்டியை அகற்ற டாக்டர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து புற்றுநோயியல் மருத்துவர்கள், கதிர்வீச்சு தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன மென்பொருள் முலம் மிகத் துல்லியமாக, மூளைத்திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு மூளையில் இருந்த கட்டியை அகற்றினர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ₹4 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாகவும்  டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: