×

நீலகிரியில் சூறாவளியுடன் தொடரும் மழை மண்சரிவு, வீடுகள் இடிந்தன: இரவு நேர போக்குவரத்துக்கு தடை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக  காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர்,  குந்தா மற்றும் ஊட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் மிக  அதிகமாக உள்ளது. மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 4 தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 2 நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது.

ஊட்டி நகர் உட்பட பல  இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.  பல பகுதிகளில் மரங்கள்  ஆங்காங்கே  சாய்ந்து விழுவதால் அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்   அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் மழையால் மண்  சரிவும் ஏற்பட்டுள்ளது. ஊட்டி-எமரால்டு சாலையில் பல்வேறு பகுதிகளிலும்  லேசான மண் சரிவு ஏற்பட்டது. மஞ்சூர் எடக்காடு சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. தடுப்புச்சுவர்  இடிந்து விழுந்து சாலையை மூடியது. 10க்கும் மேற்பட்ட இடங்களில்  மண் சரிவுகள்  ஏற்பட்டது.

பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் மின்  கம்பிகள் மீது விழுவதால்,  மஞ்சூரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில்  மூழ்கியது. நீலகிரியில் அதிகபட்சமாக  கூடலூரில் 227 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 195 மி.மீ, நடுவட்டத்தில் 147 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழை மேலும் நீடிக்கும்  என்பதால் தேசிய பேரிடர்  மீட்பு படையை சேர்ந்த 75 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பு பணிக்கு வரழைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள அனைத்து  ஆறுகள் மற்றும் நீரோடைகளில்   தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வருகிறது. மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு  தெப்பக்காடு  தரைப்பாலத்திற்கு மேல் மழை நீர் ஓடுகிறது. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி   மாவட்ட பகுதியில் இரவு நேர பயணத்துக்கு தடை விதித்து மாவட்ட எஸ்பி   ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.  கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiri , Cyclone rains continue in Nilgiris, landslides, houses collapsed: No traffic at night
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்