ஆவடியில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி: ஆவடியில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ எனும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில்,மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியருக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க, ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ எனும் நமது குப்பைகளை நாமே முறைப்படி அகற்ற வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதன்படி, ஆவடி மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு பள்ளியாக சென்று,  ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு  வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ராஜ் அறிவிப்பின்படி, அறிவியல் ஆசிரியர் குப்புராஜ் தலைமை தாங்கினார். ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், சுகாதார அலுவலர் அப்துல் ஜபார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஆணையர் தர்ப்பகராஜ் பேசுகையில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ன என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டு, அவர்களின் பெற்றோருக்கு விளக்க வேண்டும்.

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். ‘எனது குப்பைக்கு, நானே பொறுப்பு’ என்ற உறுதிமொழி ஏற்க வேண்டும். ஆவடி மாநகராட்சி பகுதிகளை குப்பை இல்லாத நகரமாக மாற்றினால்தான் அனைத்து சுகாதார வசதிகளும் மேம்படும்.  என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆவடி மாநகர துணைமேயர் சூரியகுமார், 49வது வார்டு உறுப்பினர் சாந்தி பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: