×

ஓஎம்ஆர் சாலையை அகலப்படுத்த ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ்

திருப்போரூர்: திருப்போரூர் ஓம்எம்ஆர் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து காலவாக்கம் வரையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று காலை முதலே ரவுண்டானாவில் இருந்து இள்ளலூர் சந்திப்பு வரை ஓஎம்ஆர் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகள், கட்டிடங்கள் போன்றவற்றை அளவீடு செய்தனர்.

பின்னர், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த அளவை குறிப்பிட்டு 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அதற்கான தொகை கட்டிட உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு கடந்த 4ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு 12ம் தேதியோடு முடிவடைந்து விட்டதால் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் வந்தனர்.

அப்போது, பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே கட்டிடங்களை அகற்றிக் கொண்டிருந்தனர். மேலும், சில கட்டிட உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு கேட்டு மனு அளித்தனர். இதை ஏற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கைவிட்டு விரைவில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டு சென்றனர். இந்நிலையில், திருப்போரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், திருப்போரூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் கொரோனா ஊரடங்கு முடிந்து தற்போது 6 மாதமாகத்தான் முழு நேர வியாபாரம் நடப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

Tags : OMR , Notice to encroaching shops to widen OMR road
× RELATED மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர்...