உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடத்துக்கு தேர்தல்; திமுக வெற்றியை வாரி குவித்தது: முழு விவரம் வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலில் திமுக வெற்றியை வாரி குவித்துள்ளது. தேர்தல் முடிவுகளின் முழு விவரத்தை மாநில ேதர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30ம்  தேதி  வரை ஏற்பட்ட காலியிடங்களான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 20, கிராம ஊராட்சி தலைவர்கள் 40 மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 436 என மொத்தம் 498 ஊரக உள்ளாட்சி காலியிடப் பதவியிடங்களுக்கும், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் 2, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 8 என மொத்தம் 12 நகர்ப்புற உள்ளாட்சி காலியிட பதவியிடங்களுக்கும் கடந்த 9ம் தேதி தற்செயல் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவற்றில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 4 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 6 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 292 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாநகராட்சி வார்டு பதவியிடமும், (தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண். 8) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியின் வார்டு எண்.26 உறுப்பினர் பதவியிடத்திற்கான தேர்தல் வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சி வார்டு எண். 8 உறுப்பினர் பதவியிடத்திற்கும் வேட்பு மனுக்கள் பெறப்படாததால் தேர்தல் நடைபெறவில்லை.

எஞ்சிய 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 16 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 31 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 122 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 171 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 9 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் ஆக மொத்தம் 180 உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மாவட்ட ஊராட்சி வார்டு பகுதியில் 2 காலியிடத்தில் 2 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் 20 இடங்களில் திமுக 14 இடங்களிலும், சுயேச்சை 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 2 இடங்களில் திமுக 2 இடங்களிலும், நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 1 இடத்தில் திமுகவும், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான 7 இடத்தில் திமுக 6, சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான tnsec.tn.nic.inல் தேர்தல் வெளியிடப்பட்டுள்ளது. 14ம் தேதி (நேற்று) முதல் தேர்தல் நடந்த இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: