×

சோத்துப்பாக்கம் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சோத்துப்பாக்கம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு  மற்றும் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இது சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார், துணை தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட திட்ட அலுவலர் சா.செல்வகுமார் கலந்து கொண்டார். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பொருட்காட்சியினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன, இதற்கு மாற்றாக வேறு என்ன பொருட்களை பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கிலோ ரூ.8 என்ற விலையில் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் அவாய்ட் பிளாஸ்டிக் என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் நின்று இனி பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், முழு சுகாதார திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன், ரகுநாதன், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.              


Tags : Manjapai ,Sothupakkam , Manjapai project again in Sothupakkam panchayat
× RELATED மேல்மருவத்தூர் அருகே ரயில்வே...