விதிகளை மீறி சிறுமியின் கருமுட்டை விற்பனை; 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை  செயலாளர் செந்தில்குமார், மற்றும் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஜூன் மாதம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடமிருந்து கருமுட்டை ஈரோடு, சேலம், ஓசூர் பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிக ரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஜூன் 5ம் தேதி விசாரணை செய்தது.

விசாரணையின் அடிப்படையில், ஈரோடு மற்றும் சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் விசாரணை செய்யப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள மாத்ருதுவா குழந்தை கருத்தரிப்பு மையம் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

கருமுட்டை தானத்திற்கு சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்ப்பந்தம் செய்துள்ளனர். போலி ஆவணங்களை 6 மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள நான்கு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 2 மருத்துமனைகள் மீது அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

எனவே, இந்த மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டுள்ளதால், உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியம் கூறினார்.

கருமுட்டை விற்றவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக ₹50 லட்சம் அபராதமும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளாக செயல்படுகின்றன. விசாரணை அறிக்கை அடிப்படையில் இந்த இரு மருத்துவமனைகளையும் இத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையின்படி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

Related Stories: