×

மாலத்தீவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்; கோத்தபய சிங்கப்பூருக்கு ஓட்டம்: துபாயில் அரசியல் தஞ்சம் அடைய திட்டம்

கொழும்பு: மாலத்தீவில் தஞ்சமடைந்த இலங்கை அதிபர் கோத்தபயவுக்கு எதிராக அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் தீவிர போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் தப்பி சென்றார். சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்ல திட்டமிட்டுள்ள அவர், அரசியல் அகதியாக அந்த நாட்டில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திவாலாகும் நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும், அவரது மகன் நமல் ராஜபக்சே, மகிந்தாவின் சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்தும் விலகினர். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்நிலையில், கோத்தபயவும், அவருக்கு துணை யாக இருந்த பிரதமர் ரணிலையும் பதவி விலகி வலியுறுத்தி, கடந்த  வாரம் சனிக்கிழமை மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியனர். இதையடுத்து, தலைமறைவான கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13ம் தேதி பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில், அதிபர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்ய வேண்டிய கோத்தபய ராஜபக்சே, அதிகாலையில் தனது குடும்பத்துடன் விமானப்படை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

மேலும், இலங்கை அரசியலமைப்பு சட்டம் 37(1)ன்படி, பொறுப்பு அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தனா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு கோத்தபய ராஜபக்சே பெயரில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘நான் இலங்கைக்கு வெளியே இருப்பதால், பணிபுரிய முடியாது என்பதால், நான் நாடு திரும்பும் வரையிலும், அதிபர் பொறுப்புகள், கடமைகள், அதிகாரங்கள் ரணில் விக்ரமசிங்கேக்கு மாற்றப்படுகிறது. இடைக்கால அதிபர், பிரதமர் பொறுப்புகளை வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே, அனைத்துக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் மாலத்தீவு அரசும், ‘கோத்தபய இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவி விலகாததால், அவர் தொடர்ந்து அதிபராக செயல்படுகிறார்’என்று தெரிவித்துள்ளது. இதனால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், மாலத்தீவில் கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக் கூடாது என அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், கோத்தபய, அவரது மனைவி லோமா மற்றும் அவர்களின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவே  விமானத்தில் சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடியுரிமை அலுவலகத்துக்கு கோத்தபய அறைக்கு நேரடியாக செல்வதற்கு, மாலத்தீவு தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால், மக்களோடு வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு வரிசையில் நின்றால் மக்கள் தாக்குவார்கள் என்று அஞ்சி கடைசி நேரத்தில் இந்த விமானத்தை தவறவிட்டார்.
இதையடுத்து, மாலத்தீவு அரசிடம் தனி விமானம் ஏற்பாடு செய்து தரும்படி கோத்தபய கோரிக்கை வைத்தார். பின்னர், நேற்று மாலத்தீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் எஸ்வி 788 என்ற விமானத்தில் சிங்கப்பூருக்கு கோத்தபய குடும்பத்துடன் தப்பி சென்றார். ஆனால், கோத்தபய தஞ்சமடைய சிங்கப்பூர் அரசு அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யாருக்கும் சிங்கப்பூரில் அடைக்கலம் தரவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது.

இதனால, சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்ல  கோத்தபய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் தனது மனைவியுடன் கோத்தபய அரசியல் தஞ்சம் அடைவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகே, அவர் தனது பதவியை ராஜினாமா  செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜினாமா கடிதம் வந்ததா?: அதிபர் பதவியில் இருந்து 13ம் தேதி விலகுவதாக அளித்த வாக்குறுதியின்படி கோத்தபய நடந்து கொள்ளாமல் இருப்பதால், சபாநாயகர் அபேவர்தனாவும் அதிருப்தி அடைந்துள்ளார். உடனடியாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால், கோத்தபயவை பதவியில் இருந்து நீக்குவதற்கான வேறுவழிகளை பரிசீலிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான சட்ட விதிகளை  சபாநாயகர் அலுவலகம் ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், கோத்தபய தனது ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டதாக ஒரு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவரது கையெழுத்து இல்லை. ஆனால், கோத்தபயவிடம் இருந்து தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Maldives ,Gothabaya ,Singapore ,Dubai , People's protest besieging the President's House in Maldives; Gotabaya flees to Singapore: Plans to seek political asylum in Dubai
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...