×

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க அழைப்பு; மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.! அடுத்த வாரம் செல்கிறார்

சென்னை: மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஆகஸ்டு 10ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஸ் ஒலிம்பியாட் விழாவில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகளைக் கொண்ட பணிக்குழுவும் அமைக்கப்பட்டு அந்த குழு சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் 22 ஆயிரம் சதுர அடி அளவிலான அரங்கத்தை விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அதுதவிர வாகனங்கள் நிறுத்தும் இடம், சாலை வசதிகள், மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பூஞ்சேரிக்கு சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நகர் முழுவதும் முக்கியமான சாலைகளில் செஸ் போட்டியை பிரபலப்படுத்த விளம்பர பலகைகள் மட்டுமல்லாது செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் குதிரை உள்ளிட்ட காய்களின் உருவத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பியாட் தீபத்தின் தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தீபம் 40 நாட்களில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக போட்டி நடக்கும் மாமல்லபுரம் வந்தடைகிறது. செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதையடுத்து, 29ம் தேதி மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று செஸ் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்த போட்டிகளை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு, தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். பல்வேறு நாடுகளுக்கும் சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசி, முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் முதலீடுகளை செய்ய பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த செஸ் போட்டியின்மூலம் உலக அளவில் தமிழகத்தின் புகழை நிலைநாட்ட முதல்வர் முயற்சி எடுத்து வருவது பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : 44th Chess Olympiad Competition ,Modi K. ,Stalin ,Delhi , Invitation to Inaugurate 44th Chess Olympiad; M. K. Stalin's trip to Delhi to meet Modi.! Going next week
× RELATED சொல்லிட்டாங்க…