×

சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் 2 ரன்வேக்கள் இயக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் ஒரு மணி நேரத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 2 ரன்வேக்கள் உள்ளன. முதல்  ரன்வே 3.66 கிமீ தூரமும், இரண்டாவது ரன்வே 2.89 கிமீ தூரமும் உள்ளது. இதில், முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்திறங்கி, புறப்பட்டு செல்கின்றன. இரண்டாவது ரன்வேயில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, முதல் ரன்வே அளவுக்கு 2வது ரன்வேயின் நீளத்தை அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது. பின்னர், சென்னை அருகே ₹40 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய கிரீன்பீல்டு விமானநிலையம் விரைவில் அமையவிருப்பதால், இங்கு 2வது ரன்வேயை நீடிக்கும் திட்டத்தை கைவிட்டது.

அதே நேரத்தில், சென்னை விமானநிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. எனவே, அதற்கு தகுந்தாற்போல் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த திட்டமிட்டது. இதையடுத்து முதல் ரன்வேயை விமான புறப்பாட்டுக்காகவும், 2வது ரன்வேயை விமானங்கள் தரையிறங்கவும், சிறிய ரக விமானங்கள் புறப்பாட்டுக்கும் பயன்படுத்த திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் சோதனை அடிப்படையில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே தரையிறங்கும் விமானங்கள் விரைந்து நடைமேடைக்கு வந்து நிற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் ஒரு ரன்வேயிலிருந்து மற்றொரு ரன்வேக்கு மாற டாக்ஸி வே எனும் இணைப்பு பாதை பயன்படுகிறது. இந்த டாக்ஸி வே ‘பி’ என்ற பிராவோ, முதல் ஓடுபாதைக்கு நேராக செல்லாமல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் விமானங்கள் டாக்சி வேயில் விரைந்து செல்ல முடியாத நிலை இருந்தது.

இதைத் தொடர்ந்து டாக்சி வே ‘பி’யை நேர்படுத்தும் பணிகள் நடந்தன. இதனால் விமானங்கள் டாக்சி வேயில் காத்திருக்காமல் துரிதமாக இயக்க முடிந்தது. இவை அனைத்து சோதனை ஓட்ட காலத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்கள் செயல்படுத்த டிஜிசிஏ எனும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் 2 ரன்வேக்கள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு மணி நேரத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை திறன் 50 ஆக உயர்ந்தது. இனி, சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்பாடுகளில் அதிக தாமதம் ஏற்படாது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai Airport , 2 runways in operation at Chennai airport from today
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...