மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை..மும்பையில் பருவமழை தீவிரம்..: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

மும்பை: மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரயில் போக்குவரத்தில் மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ரயில்கள் காலதாமதமாக இயங்கியது. அந்தேரி மிலன் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

குர்லா கமானி சந்திப்பு, தேவ்னார் நீலம் ஜங்ஷன், மான்கூட்டு ரயில்வே மேம்பாலம், பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பால கேட், ஒர்லி, விக்ரோலி, சாந்தாகுருஸ் பஸ் நிலையம், தாதர்டி.டி, வடலா, காட்கோபர், சோனாப்பூர் சந்திப்பு ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பகுதிகளான போரிவிலி கோரேகாவ், ஜோகேஸ்வரி, அந்தேரி மற்றும் பாந்திரா ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.மும்பை-புனே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறாங்கற்கள் சாலையில் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் விபத்தில் எதுவும் சிக்காததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மீட்பு படையினர் விரைந்து சென்று சாலையில் விழுந்த பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று மும்பை, புனே உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிர கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாசிக், புனே, பால்கர் மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கட்சிரோலி மாவட்டத்தில் பெய்த மழையால் ஆறு, குளங்கள் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது

Related Stories: