டெல்லி கட்டமைப்பு வளர்ச்சியை பின்பற்ற திட்டம்: டெல்லி மாடலை ஆய்வு செய்ய குழு அனுப்பிய குஜராத் அரசு

சூரத்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் குஜராத் மாடலை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சி தற்போது சட்டப்பேரவை தேர்தலையொட்டி டெல்லி மாடலை பார்வையிட குழுவை அனுப்பியுள்ளது. குஜராத்தில் இருந்து 17 பேர் கொண்ட குழு கடந்த மாத இறுதியில் டெல்லியில் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள், குடியிருப்புகளில் இந்த குழுவினர் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய 2 நாட்கள் பார்வையிட்டனர். ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள போகும் இந்த சமயத்தில் டெல்லி மாடல் வளர்ச்சியை பார்வையிட குஜராத்தில் இருந்து பிரதிநிதிகள் சென்றிருப்பது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது.

பரப்பளவில் டெல்லியை காட்டிலும் குஜராத் 100 மடங்கு பெரிய மாநிலம். மக்கள் தொகை டெல்லியை விட குஜராத்தில் 3 மடங்கு அதிகம். ஆனால் கல்வி சுகாதார கட்டமைப்புகளில் டெல்லியை விட குஜராத் பின்தங்கி இருப்பதே கள எதார்த்தமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் டெல்லியில் சுகாதார மையங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. கல்வி நிலையங்களின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் நகர்ப்புற சுகாதார மையங்களில் மருத்துவர்களின் தேவை 541ஆக இருக்கும் நிலையில் 955 பேர் உள்ளனர். ஆனால் குஜராத் மாநிலத்தில் தேவை 318 மருத்துவர்களாக இருக்கும் நிலையில் இருப்பது 116 பேர் மட்டுமே. நகர்ப்புற சுகாதார மையங்களில் மருந்தாளுநர்களின் தேவை டெல்லியில் 541 ஆக இருக்கும் நிலையில் 803 பேர் உள்ளனர்.

ஆனால் குஜராத்திலோ தேவை 318ஆக இருக்கும் நிலையில் 291 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்களின் தேவை டெல்லியில் டெல்லியில் 1,434ஆக இருக்கும் நிலையில் 8,122 பேர் உள்ளனர். ஆனால் குஜராத்தில் 123 பேர் தேவைப்படும் நிலையில் 106 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஒன்றுக்கு சராசரி ஆசிரியர் விகிதம் டெல்லியில் 30ஆக உள்ளது. ஆனால் குஜராத்தில் 6ஆக மட்டுமே உள்ளது. அதேபோல மாணவர் சேர்க்கை விகிதம் அரசு மருத்துவமனை படுக்கைகள் விகிதம் ஆகியவற்றிலும் குஜராத்தை விட டெல்லி மேம்பட்டுள்ளது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. ஆனால் ஆம் ஆத்மீ கட்சி டெல்லியில் 2015ம் ஆண்டில் தான் முதல் முழுமையான 5 ஆண்டு கால ஆட்சி பயணத்தை தொடங்கியது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் எந்த மாநிலத்தில் தேர்தல் என்றாலும் பாஜக முன்னிறுத்துவது குஜராத் மாடலை தான். அதற்கு போட்டியாக சமீபத்தில் தேர்தல் நடந்த பஞ்சாப், உத்தராகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களை ஆம் ஆத்மீ கட்சி டெல்லி மாடலை முன்னிறுத்தியது. டெல்லியின் வளர்ச்சியை பாருங்கள் என பரப்புரை செய்தெ பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துவிட்டது ஆம் ஆத்மீ. இப்படிப்பட்ட அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி மாடல் வளர்ச்சியை குஜராத் பிரதிநிதிகள் பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள்.

Related Stories: