எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது :சபாநாயகர் அப்பாவு

சென்னை : எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக தரப்பில் ஒரு தபால் தரப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்தவிதமான தபாலும் கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரிடம் இருந்து மட்டுமே நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. சட்டப்படி, விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் எப்படி சட்டமன்றம் நடந்ததோ அதேபோல எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் ஜனநாயக முறையில் நடக்கும். கடிதத்தின் மீது இதுவரையில் எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.

அதிமுக விவகாரங்கள் எதுவும் எங்களின் கட்டுப்பாட்டில் கிடையாது. தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்கிறோதோ அது தான் முடிவு.ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களில் ஒப்புதல் கிடைத்தும் கிடைக்காமலும் நிறைய மசோதாக்கள் உள்ளது. நிறைய மசோதாக்கள் ஒப்புதல் இல்லாமலேயே உள்ளது. நீட் மசோதாவும் உள்துறைக்கு சென்றதா, இல்லையா என்ற விவரமும் தெரியவில்லை. சட்டமன்ற மரபுப்படி உறுப்பினர்கள் சில தீர்மானத்தை கொண்டுவந்து அவை ஏகமனதாகவும் பெரும்பான்மை உறுப்பினர்க்ளின் முடிவுப்படி நிறைவேற்றப்படுகிறது. அந்த தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது தான் சட்டப்பூர்வமான விதி.  இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Related Stories: