×

திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் ‘ஹாயாக’ வாக்கிங் போன சிறுத்தை: வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையோர தடுப்புச்சுவரில் ‘ஹாயாக’ வாக்கிங் போன சிறுத்தையை பார்த்து, அச்சத்தில் வாகன ஓட்டிகள் அலறியடித்து விலகிச் சென்றனர். இதனை வீடியோ, போட்டோ எடுக்கும் பயணிகளை வனத்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்  புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி,  காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த  வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி  வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில்  அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு 23வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்  சுவரில் ஒரு சிறுத்தை ஜாலி மூடில் ‘வாக்கிங்’ சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன  ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அலறியடித்து வாகனங்களை திருப்பிக் கொண்டு விலகி வேகமாக சென்றனர். வாகன ஓட்டி ஒருவர்  சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம்  சாலையோரம் நடமாடிய சிறுத்தை, பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள்  சென்று  மறைந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘திம்பம் மலைப்பாதை  வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தைவிட்டு கீழே இறங்க வேண்டாம். வீடியோ, போட்டோ எடுக்கும் சாகச செயல்களில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், வாகன ஓட்டி எடுத்த சிறுத்தை வாக்கிங் வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



Tags : Cheetah ,Thimpham mountain road , Cheetah walking 'comfortably' on the barrier wall of the Thimpham mountain road: motorists run screaming
× RELATED டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு