பெணுகொண்டாபுரம் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்: கிராம மக்கள் பீதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெணுகொண்டாபுரத்தில் பெரிய ஏரி உள்ளது. 240 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தற்போதைய மழையால் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கிறது. பெணுகொண்டாபுரம் ஏரி, பாரூர் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரால் நீர்வரத்து பெறுகிறது. பாருர் ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியான பெணுகொண்டாபுரம் ஏரியிலிருந்து தீர்த்தகுட்டை ஏரி, எத்தலான் ஏரி, மோட்டாங்குட்டை ஏரி, நாகலேரி என 4 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெணுகொண்டாபுரம் ஏரியின் மதகு உடைப்பட்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் சேமிக்கப்படாமல் இருந்து வந்தது. புதிய மதகு அமைக்கப்பட்ட பின் இந்த ஆண்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஏரியின் மதகு அருகே சுமார் 500 மீட்டர் தொலைவில் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.  

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பாரூர் பெரிய ஏரியில் இருந்து பெணுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்தால் ஏரி நிரம்பி காணப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன் பெறுவதுடன் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த ஏரி நிரம்பிய நிலையில், கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் கரை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்பதால் அச்சத்தில் உள்ளோம். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு நீர்க்கசிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயசங்கரிடம் கேட்டபோது, ஏரி நிரம்பினால் உடைப்பு ஏற்படுவது இயல்பு. இருப்பினும் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: