மயிலாடுதுறை- திருவாரூர் இடையே மீண்டும் ரயில் சேவை துவங்கியது: உபயோகிப்பாளர் சங்கம் வரவேற்பு

திருவாரூர்: மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு மீண்டும் இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்களில் பெரும்பாலானவை சிறப்பு ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஒவ்வொரு ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை ஏற்கனவே இயங்கி வந்த பாசஞ்சர் ரயிலானது தற்போது சிறப்பு ரயில் சேவை என்ற பெயரில் ஜூலை 12 (நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. இதனையொட்டி மயிலாடுதுறையில் காலை 6.20 மணியளவில் புறப்பட்ட இந்த ரயிலானது திருவாரூர் ரயில் நிலையத்திற்கு காலை 7.25 மணி அளவில் வந்தடைந்தது.

அங்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் மற்றும் பொறுப்பாளர்கள் இலியாஸ், நடராஜன் உள்பட பலரும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பின்னர் இந்த ரயில் காலை 8.10 மணி அளவில் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது. இதுகுறித்து பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், இந்த ரயில் மீண்டும் இயங்குவதன் மூலம் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் பயனடையும் வகையில் உள்ளது. இதற்கு காரணமான நாகை எம்பி செல்வராஜ் மற்றும் தென்னக ரயில்வேதுறைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

Related Stories: