பேட்டை தெரு சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கழிவுநீர் வடிகால்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை- பேட்டை தெரு சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் வடிகால் வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேட்டை சாலையில் குட்டியார் பள்ளி வாசல் அருகே கழிவு நீர் வடிகால் ஒன்று செல்கிறது. இந்த கழிவுநீர் வடிகால் ஆவனாநேனா அரசு பள்ளி முதல் துவங்கி பேட்டை செக்போஸ்ட் அருகே செல்லும் கோரையாற்றில் வடிகிறது. இந்த கழிவுநீர் வடிகாலில் முத்துப்பேட்டையில் உள்ள பல்வேறு வார்டுகளில் உள்ள தெருக்களின் கழிவுநீர் இங்குதான் வந்து வடிகிறது. இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்பு இந்த பேட்டை சாலை பணிகள் நடந்த போது சாலையோர வடிகால் கட்டுமான பணிகளும் நடந்தது.அப்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு வடிகால் கட்டுமான பணிகள் நடந்தபோது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பால் பெயரளவில் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலை நெடுவெங்கும் கழிவுநீர் வடிகால் திறந்த நிலையிலும், சில இடங்களில் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக குட்டியார் பள்ளிவாசல் வடக்கு சந்து திரும்பும் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் விடப்பட்டதால் அந்த பகுதி சாலையோரத்தில் பெரியளவில் அபாயகரமான பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி இந்த பள்ளத்தில் கவிழ்ந்து சிறு சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. இவ்வழியாகதான் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை நகர் பகுதிக்கு வரவேண்டும். இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக அதிகளவில் பள்ளி வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி சென்று வருகிறது. அந்த நேரத்தில் விபத்துக்கள் நேர்ந்தால் பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளது.மேலும் அந்த இடத்தில் கழிவுநீரும் வருடக்கணக்கில் தேங்கிக்கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் சுகாதார நலன்கருதி, சுற்றுப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதியும் இந்த அபாயகரமான இந்த வடிகால் பள்ளத்தை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: