தொடர் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய சிம்ஸ் பூங்கா

குன்னூர்: குன்னூர் பகுதியில்  தொடர் மழை, கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் இன்றி சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ், காட்டேரி பூங்காவை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழையுடன் கடும் குளிர் நிலவுவதால்  பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்  இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தொடர் மழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, உள்ளிட்ட ‌ சுற்றுலா தலங்களில் பயணிகள்  வருகை குறைந்து  வெறிச்சோடி காணப்படுகிறது. படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் இல்லாததால் படகு இல்லம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: