×

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

* அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது
* 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித் தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.

இறைவன் திருவடிவாக இங்குள்ள அண்ணாமலை காட்சியளிப்பதால், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 12.52 மணிக்கு நிறைவடைந்தது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளிபிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்ததால், சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை காணப்படடது. அதனால், பகலில் நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.18 மணிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் ெதாடங்கியதால், அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும், பகலில் வெயில் தணிந்து, இதமான நிலை காணப்பட்டது. எனவே, பகலிலும் கிரிவல பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. மாலை 5 மணிக்கு பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று அதிகாலை தொடங்கி, இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தொலைவும் பக்தர்களால் நிறைந்திருந்தது.

கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வழக்கம்போல முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன.


குரு பவுர்ணமியில் திரண்ட பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகும். விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகரித்தும், வார நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும். இந்நிலையில், விடுமுறை அல்லாத நாளான நேற்று ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்தது.

ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் விஷேசமாக கொண்டாடப்படும் குரு பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கிரிவல பக்தர்களின் வருகை நேற்று வெகுவாக அதிகரித்திருந்தது. நேற்று அதிகாலை தொடங்கி, இன்று அதிகாலை வரை கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வெளி மாநில பக்தர்களின் வருகை நேற்று அதிகரித்திருந்தது. குரு பூர்ணிமா எனப்படும் குரு பவுர்ணமி நாளன்று கிரிவலம் சென்றால், இல்லத்தில் செல்வமும், செழிப்பும் பெருகும் என்ற நம்பிக்கை காரணமாக, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

Tags : Thiruvanamalaya , Tiruvannamalai, Annamalaiyar temple, Pournami, Girivalam
× RELATED திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் தரையில்...