×

நகரங்களின் தூய்மைக்கான விழிப்புணர்வு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

பூந்தமல்லி: தமிழக அரசின் உத்தரவின் பேரில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட 18 நகராட்சிகளில் பாட்டுப் போட்டி, சுவர் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.  என் குப்பை என் பொறுப்பு, நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்களிப்பு, மரம் வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம் ஆகிய தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த பாடல் போட்டியில் இசையுடன் கூடிய 194 பாடல்களை போட்டியாளர்கள் வலைதள இணைப்பில் பதிவேற்றம் செய்தனர். இந்தப் பாடல்களில் பரிசு பெறும் பாடல்களை செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக அதிகாரிகள், திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் தீனா ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுத்தனர்.

இந்தப் பாடல்களில் பரிசு பெறும் பாடல்களை நகராட்சி அதிகாரிகள், மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் தீனா ஆகியோர் இணைந்து பம்மலை சேர்ந்த நாகார்ஜூன் என்பவருக்கு முதல் பரிசு ₹ 20 ஆயிரமும், பொன்னேரியை  சேர்ந்த பொக்கிஷா என்பவருக்கு 2-வது பரிசு ₹10 ஆயிரமும், செங்கல்பட்டை சேர்ந்த ஜனா என்பவருக்கு 3-வது பரிசு ₹5 ஆயிரம் மற்றும் போரூரை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவர் உள்பட 17பேருக்கு ஆயிரம் ரூபாய் ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தனர். மேலும், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடந்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 71 மாணவ - மாணவிகள் வெற்றி பெற்றனர். இதன் பரிசளிப்பு விழா திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நகரமன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், நடிகை அஞ்சு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness Competition for Cleanliness of Cities: Award to Winners
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...