×

காஞ்சிபுரத்தில் 115 ஆண்டுகள் பழமையான ராஜாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு ரூ.7 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்; எம்எல்ஏக்கள் அடிக்கல் நாட்டினர்: வையாவூரில் தற்காலிக மார்க்கெட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 115 ஆண்டுகள் பழமையான ராஜாஜி காய்கறி மார்க்கெட், ரூ.7 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை துவங்க எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். இந்த பணிகள் முடியும் வரை, வையாவூரில் தற்காலிகமாக மார்க்கெட் இயங்க உள்ளது.

கோயில் நகரமும், சுற்றுலா தலமுமான காஞ்சிபுரத்தில் பழைய ரயில்வே சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 350க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சென்னை கோயம்பேடு மற்றும் வெளி மாநிலங்களில் வரும் காய்கறிகளை இங்குள்ள சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளிடமிருந்து காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இந்த ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் சிமென்ட் கூரை மற்றும் ஓடுகளலான கடை என்பதால் மழைக்காலங்களில் மழை நீரானது கடைகளில் உட்புகுந்தும், மார்க்கெட் வளாகத்தில் சுமார் 2 முதல் 3 அடி வரையிலும் தேங்கி நிற்கிறது. இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இம்மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அங்குள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த தொடர் கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றுவதற்கு  காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ₹7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைதொடர்ந்து, 115 ஆண்டுக்கால பழைமையான காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டை ₹ 7 கோடியில் புதிதாக 280 கடைகளுடன் அனைத்து நவீன  கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட மார்க்கெட் வளாகமாக மாற்றி கட்டிடும் பணியினை நேற்று உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்து பணியினை துவக்கி வைத்தனர்.

மேலும், தற்போது இப்பணிகள் நிறைவு பெறும் வரையில் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டிலுள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் கடந்த கொரோனா காலக்கட்டத்தில் செயல்பட்ட தற்காலிக மார்க்கெட் இடத்தில் தற்காலிகமாக இயங்கும் என ராஜாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் கண்ணன், காஞ்சிபுரம் நகர செயலாளர் ஆறுமுகம், மண்டல தலைவர்கள் சாந்தி சீனிவாசன், சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், செவிலிமேடு மோகன், கமலக்கண்ணன், ராஜாஜி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மோகன், திமுக நிர்வாகிகள் எஸ்கேபி சீனிவாசன், தசரதன், கேஏ செங்குட்டுவன், மாமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள்  என பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Rajaji Vegetable Market ,Kanchipuram ,Vaiyavur , A new building with modern facilities at a cost of Rs 7 crore for the 115-year-old Rajaji Vegetable Market in Kanchipuram; MLAs lay foundation stone: Temporary market at Vaiyavur
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...