×

மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் ராமர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்தார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்ட நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய தேரில் ராமர், தேவி, பூதேவி ஆகியோருடன் எழுந்தருளினார்.

இதையடுத்து, பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 மாட வீதிகள் வழியாக சென்று தேரடி தெரு, சூனாம்பேடு சாலை, ஆஸ்பிட்டல் சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘‘கோவிந்தா கோவிந்தா’’ கோஷம் முழக்க மிட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேர் சென்ற பாதைகளில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம், மோர், சர்க்கரை பொங்கல் வழங்கினர். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊர் மக்களும் சிறப்பாக செய்திருந்தனர். படவிளக்கம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், சாமியை வணங்கி தரிசனம் பெற்ற சென்றனர்.

Tags : Eerikatha ,Ram Temple ,Madhuranthakam , Eerikatha Ram Temple Chariot at Madhuranthakam: Large number of devotees participate
× RELATED மதுராந்தகம் அருகே இளநீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து