×

ஆரல்வாய்மொழியில் கள்ளக்காதலை தொடர மறுத்ததால் பயங்கரம் இஎஸ்ஐ ஊழியரை 30 இடத்தில் கத்தியால் குத்தி கொன்ற பேராசிரியை: கொலை பற்றி 100க்கு போன் செய்து தகவல்

ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி இஎஸ்ஐ மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியரை, பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை  ஒருவர், 30க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35). ஆரல்வாய்மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக  பணியாற்றி வந்தார். வாரத்தில் 3 நாள் கருங்கலிலும் 3 நாள்  ஆரல்வாய்மொழியிலும் வேலை செய்துள்ளார்.

இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் கீர்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 5 மாதங்களாக ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.  இஎஸ்ஐ மருந்தகம் காலை 7.30 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் செயல்படும். நேற்று மதியம் இஎஸ்ஐ மருந்தகத்தில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. அது குடியிருப்பு பகுதி என்பதால் மக்கள் ஓடி வந்து பார்த்தனர். தகவலறிந்து ஆரல்வாய்மொழி போலீசாரும் விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கே ரதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஒரு பெண் கையில் கத்தியுடன் அருகில் அமர்ந்திருந்தார். போலீசார் அவரை  பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த பெண், மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் மனைவி ஷீபா (37). எம்.எஸ்.சி. பி.எட் முடித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குமரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் பேராசிரியையாக பணிபுரிந்தவர். 2013ல் இவருக்கும் ரதீஷ்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு ரதீஷ்குமாருடன் செல்ல ஷீபா தயாராகியுள்ளார். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ரதீஷ்குமாருக்கு திருமணம் ஆனது. இதைதொடர்ந்து ஷீபாவுடனான உறவை ரதீஷ்குமார் துண்டித்துள்ளார்.

இதை தாங்க முடியாத ஷீபா பலமுறை ரதீஷ்குமாரை ெதாடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் ஷீபாவை முற்றிலும் புறக்கணித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஷீபா, அவரை பழி வாங்க முடிவு செய்துள்ளார். ஜூலை 13ம் தேதி ஷீபாவிற்கு பிறந்த நாள். இதனால் நேற்று முன்தினம் ரதீஷ்குமாருக்கு போன் செய்து, கடைசி முறையாக எனது பிறந்த நாளில் உன்னை பார்க்க விரும்புகிறேன். நான் உணவு கொண்டு வருகிறேன். ஒன்றாக சாப்பிடலாம் என்று கூறி கெஞ்சியுள்ளார். இதனால் அவரும் வரும்படி கூறியுள்ளார்.

இதற்காக வீட்டில் அறுசுவை உணவு சமைத்து அதில் தூக்க மாத்திரை கலந்து எடுத்துச் சென்றுள்ளார். உணவை உண்டு மயங்கி விழுந்தவரை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரதீஷ்குமார் ரத்தவெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். பின்னர் ஷீபா 100ம் எண்ணை தொடர்பு கொண்டு, தான் கொலை செய்துவிட்டதாகவும் உடனே போலீசாரை வரச் சொல்லுமாறும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ரதீஷ்குமார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஷீபாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

* தொடர்பு ஏற்பட்டது எப்படி?
மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஷீபாவின் தந்தை, வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2009ல் ஷீபாவிற்கு திருமணமானது. இவரது கணவர் மருந்து விற்பனை பிரதிநிதி. 2 குழந்தைகள் உண்டு. 2வது குழந்தை பிரசவத்துக்கான ஆப்ரேஷன் கிளைம் தொடர்பாக கருங்கல் இஎஸ்ஐ அலுவலகத்திற்கு சென்றபோது ரதீஷ் குமாருக்கும் ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை சரியல்லாமல் ஷீபா சில நாட்கள் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ரதீஷ்குமார் அந்த பில்லை கொண்டு வந்தால் பணம் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். இப்படி இவர்கள் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஷீபா தனது தாய் இறந்தது உள்ளிட்ட விஷயங்களை ரதீஷ்குமாரிடம் பகிர்ந்துள்ளார். அவர் ஆறுதல் கூறியுள்ளார். இப்படி நெருக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்தது.

* கணவனிடம் விவாகரத்து
ரதீஷ்குமார் ஷீபாவிடம் உன் கணவரை விவாகரத்து செய், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதுதெரிந்து ஷீபாவின் கணவர், 2017ல் வடசேரி போலீசில் என் மனைவியை ரதீஷ்குமார் டார்ச்சர் செய்கிறார் என்று புகார் தெரிவித்தார். ஆனால் ஷீபா போலீசாரிடம் அதை மறுத்துள்ளார். இந்நிலையில் வீட்டு பத்திரம், ரேஷன்கார்டு எல்லாம் எடுத்து வா. நாம் உன் கணவரை மிரட்டி டைவர்ஸ் வாங்கலாம் என்று ரதீஷ்குமார் கூறவே அவரும் அதன்படி செய்து மிரட்டி 2019ல் டைவர்ஸ் பெற்றுள்ளார். அதன்பின் இருவரும் திருமணம் செய்யாமலே மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

* 2 முறை தற்கொலைக்கு முயற்சி
2021ல் ரதீஷ்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த ஷீபா, கருங்கல் அலுவலகம் சென்று தனது கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரதீஷ்குமார் தனக்கு திருமணம் எல்லாம் ஆகவில்லை என்று கூறி சமாதானம் செய்து அனுப்பியுள்ளார். ஆனால் பின்னர் திருமணமானது உறுதியாகவே ஷீபா கண்ணாடி துகள்களை உடைத்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது தொடர்பு கொண்ட ரதீஷ்குமார், ஏதோ சூழலால் திருமணம் ஆகிவிட்டது. அவளை விவாகரத்து செய்கிறேன். ஒன்றரை லட்சம் தா என்று கேட்டுள்ளார். அதை நம்பி ஷீபா பணம் கொடுத்துள்ளார். ஆனால் விவாகரத்துக்கான எந்த முயற்சியும் ரதீஷ்குமார் எடுக்கவில்லை. அவரை தொடர்பு கொள்வதையும் துண்டித்துள்ளார். இதுதான் கொலைக்கு காரணமாகியுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : ESI ,Aralwai Mozhi , Professor who stabbed ESI employee to death at 30 places after refusing to continue plagiarism in Aralwai Mozhi: Call 100 to report the murder
× RELATED சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி