×

முதல்வருக்கு கடிதம் எழுதி எம்ஜிஆர் ரசிகர் வாழ்த்து வேலூர் ஆட்டோ டிரைவருடன் போனில் பேசினார் மு.க.ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

வேலூர்: தனக்கு கடிதம் எழுதி வாழ்த்து கூறிய எம்ஜிஆர் ரசிகரான வேலூர் ஆட்டோ டிரைவருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் போனில் பேசினார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை திரும்பிய முதல்வருக்கு வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில், முதல்வர் அவர்களே, நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறி இருந்தீர்கள்.

அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துக்கள். நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை நான் அறிகிறேன். மேலும் நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. வாழ்த்துக்கள் ஐயா என்று கூறியிருந்தார். மேலும், கலைஞருடன் எம்ஜிஆர் இருக்கும் புகைப்படத்தையும், எம்ஜிஆருடன் மு.க.ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தை படித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ டிரைவர் பன்னீர் செல்வத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர், ஆட்டோ டிரைவர் பன்னீர் செல்வத்திடம் போனில் பேசிய உரையாடல்:
முதல்வர்: ஹலோ பன்னீர்செல்வங்களா... நான் மு.க.ஸ்டாலின் பேசறேன்
டிரைவர்: ஆமாங்கண்ணா... வணக்கம்.. சொல்லுங்கண்ணா
முதல்வர்: உங்க கடிதத்தை படிச்சேன். நீங்க புரட்சி தலைவர் ரசிகர்னு சொல்லி இருக்கீங்க.. நானும் எம்ஜிஆர் ரசிகன் தான். எனக்கு பாராட்டு எல்லாம் சொல்லி கடிதம் எழுதியிருக்கீங்க. உங்க பாராட்டுக்கு நன்றி சொல்லத்தான் போனை போட்டேன்.
டிரைவர்: ரொம்ப நன்றிங்கண்ணா.. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம்.. உங்க கைக்கு என் லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சிட்டேன்.
முதல்வர்: அதெப்படி
வராமல் இருக்கும்.. கரெக்ட்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சு.. என்ன செய்றீங்க?
டிரைவர்: ஆட்டோ ஓட்டறேண்ணா
முதல்வர்: எங்கே டவுனுக்குள்ளேயேவா.. சரி தம்பி, சரி தம்பி.
இவ்வாறு உரையாடல் நடந்துள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : M.G.Stalin ,Chief Minister ,MGR ,Vellore , M.K.Stalin wrote a letter to the CM and congratulated MGR fans on phone with Vellore auto driver: audio viral on social media
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...