×

துறைமுகம் தொகுதியில் சாலையோரம் வசிக்கும் 1500 குடும்பங்களை மறுகுடியமர்த்தம் செய்ய திட்டம்: குடியிருப்பு கட்ட தேர்வான இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நடத்தினர். துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முந்தியால்பேட்டை, செயின்ட் சேவியர் தெரு மற்றும் நாராயண சாரன் ஆகிய தெருக்களில் சுமார் 1500 குடும்பங்கள் சாலையோரம் வசிக்கின்றனர்.

இவர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். இந்த இடங்களில் குடியிருப்புகள் கட்டுவதற்கு சாத்தியக் கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் வார்ர்டு-55ல் டேவிட்சன் தெருவில் அமைந்துள்ள மண்ணடி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வுகளுக்கு பின்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் சேகர்பாபு முயற்சியின் காரணமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் சுமார் 1,500 குடும்பங்களை மறுகுடியமர்த்தம் செய்ய தற்சமயம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மக்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மறுகுடியமர்த்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக, வால்டாக்ஸ் சாலை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பண்டகச் சாலை கிடங்கில் உள்ள 2 ஏக்கர் இடம், ஏழு கிணறு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் மற்றும் பிரகாசம் சாலையில் உள்ள கல்வித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஆகிய இடங்களில் குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்தஜோதி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Harpuram , Plan to resettle 1500 families living on roadsides in Harpuram block: Ministers inspect selected sites for residential construction
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...