×

மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் இடிந்து விழும் நிலையில் குப்பை லாரிகள் நிறுத்தும் வளாகம்: தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தினசரி 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 15 மண்டலங்களிலும் தினசரி குப்பைகளை சேகரிக்க 14 ஆயிரத்து 216 ‘காம்பேக்டர்’ குப்பை தொட்டிகளும், அவற்றை அகற்ற 261 ‘காம்பேக்டர்’ வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தெருக்களில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற ஓனிக்ஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம் ஒவ்வொரு தெருக்களிலும் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரித்தது. அவ்வாறு சேகரமாகும் குப்பைகளை காம்பாக்டர் லாரிகள் மூலம் அருகில் உள்ள குப்பை சேகரிக்கும் வளாகங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து குப்பைகளை தரம் பிரித்து பெருங்குடி அல்லது கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

இவ்வாறு குப்பை சேகரிக்கும் வளாகங்களை சென்னை மாநகராட்சி உதவியுடன் ஓனிக்ஸ் நிறுவனம் அமைத்தது. அதன்படி, சென்னையில் அதிகம் குப்பைகள் சேகரமாகும் இடங்களை தேர்வு செய்து குப்பை சேகரிக்கும் வளாகங்கள் அமைக்கப்பட்டது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் தரம் பிரித்து அதிக டன் ஏற்றக்கூடிய டிப்பர் லாரிகள் மூலம் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இப்படிப்பட்ட குப்பை சேகரிக்கும் வளாகங்கள் பல பராமரிப்பில்லாமல் போடப்பட்டதால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள பகோடா தெருவில் குப்பை சேகரிக்கும் வளாகம் ஒன்று உள்ளது. இரண்டு ஏக்கருக்கும் மேலான இந்த வளாகத்தை அப்போதைய தனியார் ஒப்பந்த நிறுவனமான ஒனிக்ஸ் நிறுவனம் சென்னை மாநகராட்சி உதவியுடன் அமைத்திருந்தது.

மயிலாப்பூர் சுற்றுப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தையும் இந்த குப்பை சேகரிக்கும் வளாகத்துக்கு கொண்டு வந்து, இங்கிருந்து தரம் பிரித்து பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்துக்கு எடுத்து செல்வார்கள். இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இந்த குப்பை சேகரிக்கும் வளாகம் பயன்படாத நிலையில் உள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ள உர்பேசர் நிறுவனம், இந்த இடத்தை பயன்படுத்தி வருகிறது. 2 ஏக்கருக்கும் மேலான பரபரபளவில் உள்ள வளாகத்தில் கட்டிடம் இருக்கும் இடம் போக மீதி காலி இடம் உள்ளது. இந்த இடங்களில், குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்துவதற்கு உபயோகித்து வருகின்றனர்.

காலி இடங்களில் இந்த லாரிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டுநர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இந்த பாழடைந்த கட்டிடத்தை பயன்படுத்துகின்றனர். மேற்பகுதியில் ஷெட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியில் உள்ள ஷெட் உடைந்து காணப்படுகிறது. மேலும் மழையில் நனைந்து ஈரப்பதத்துடன் இருப்பதால் கட்டிடம் முழுவதும் பல இடங்களில் விரிசல் காணப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தில் இரவு  நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட  செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது, மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் எந்நேரமும் இந்த கட்டிடம் இடிந்து விழும் என்பதால் இதை உடனடியாக அகற்றி பாழடைந்து கிடக்கும் இந்த கட்டிடத்தை மாநகராட்சி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு ேகாரிக்கை வைத்துள்ளனர்.

* விரைவில் நடவடிக்கை
மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு கூறுகையில், ‘‘கடந்த ஆட்சியில் குப்பை அகற்றுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஓனிக்ஸ் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்தது. அதன் பின்பு இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள உர்பேசர் நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி இந்த வளாகத்தை பயன்படுத்திக்காள்ள அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் குப்பை அகற்றும் வாகனங்களை நிறுத்துவதற்காவும், அந்த வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கும் இந்த வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பகலில் ஆள் நடமாட்டம் எந்நேரமும் இருக்கிறது. ஆனால், சிதிலமடைந்துள்ள இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வகையில் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளேன். கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Mylapore Ambedkar Bridge , Mylapore Ambedkar Bridge Collapsing Garbage Truck Parking Complex: Sanitation Workers Safety Question Mark
× RELATED மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில்...