×

வாட்ஸ்அப் டிபியில் தனது படத்தை வைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஊழியர்களிடம் பணம் பறிக்க முயற்சி: மோசடி நபர்கள் மீது மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை: வாட்ஸ்அப் டிபியில் தனது புகைப்படத்தை வைத்து சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் பிரியா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தொழில்நுட்ப உதவியாளர் சிவசங்கர் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் புகைப்படத்தை மர்ம நபர்கள் சிலர் 83186 39345 என்ற வாட்ஸ்அப் டிபியில் வைத்து, சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வாட்ஸ் அப்புக்கு ‘அமேசான் கிப்ட் கூப்பன்’ பணம் அனுப்புங்கள் என்று மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேயர் பிரியாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். எனவே, மேயர் பிரியாவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியில் வைத்து பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். புகாரின்படி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம், மேயர் பிரியா புகார் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைதொடர்ந்து இந்த வழக்கு பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த மோசடி தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேயர் புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் செயல்பட்ட சம்பவம் சென்னை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : TP ,Mayor ,Priya , Tried to extort money from employees of municipal corporation zonal officers by putting his picture on WhatsApp Tp: Mayor Priya complains against fraudsters
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!