மின்வாரிய அதிகாரிபோல பேசிய விவகாரம் ஜிஎஸ்டி உதவி கமிஷனரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8.88 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர்

சென்னை: மின்வாரிய அதிகாரி பேசுவதாக கூறி, செல்போனில் தொடர்பு கொண்டு, மின்சார பில் கட்டவில்லை என கூறி செல்போன் செயலி மூலம் ஒன்றிய ஜிஎஸ்டி உதவி கமிஷனரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.8.88 லட்சம் பணத்தை சைபர் க்ரைம் போலீசார் அதிவேகத்தில் செயல்பட்டு, அந்த பணத்தை மீட்டனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ரோமி பைநாடன்(52). இவர் ஒன்றிய ஜிஎஸ்டி கவுன்சலில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு, 22ம் தேதி எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில், மின் கட்டணம் கட்டவில்லை எனவும், மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதோடு இல்லாமல் மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் எஸ்எம்எஸ்சில் கீழே உள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்த ரோமி பைநாடன் உடனே எஸ்எம்எஸ்சில் வந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டு பணம் கட்டுவதற்கு உதவி செய்வதாக கூறி ‘டீம் வியூவர்’ என்றும் செல்போன் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மின்சார கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ரோமி பைநாடன் மின்வாரிய அதிகாரி கூறியதை நம்பி தனது செல்போனில் டீம் வியூவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள வழிமுறைப்படி தனது வங்கி கணக்கை இணைத்து பணம் கட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது மின்வாரிய அதிகாரி கூறியபடி அந்த டீம் வியூவர் செயலிலில் பயனாளர் பெயர், வங்கி கணக்கில் ரகசிய பதிவு எண் உள்ளிட்ட விபரங்களை கூறியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் ஒன்றிய ஜிஎஸ்டி உதவி கமிஷனர் ரோமி பைநாடன் வங்கி கணக்கில் இருந்து ரூ.8.88 லட்சம் பணம் மூன்று தவணைகளாக எடுத்துள்ளனர். பணம் எடுத்ததற்கான எஸ்எம்எஸ்சும் ரோமி பைநாடன் செல்போனுக்கு வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் நோட்டீஸ்கள் அனுப்பி உடனே பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். பின்னர் வங்கி அதிகாரிகள் உதவியுடன் மோசடி செல்போன் ஆப் டீம் வியூவர் செயலி மூலம் மோசடி செய்த ரூ.8.88 லட்சம் பணத்தை உரிய நேரத்தில் மீண்டும் ரோமி பைநாடன் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. பணத்தை மீட்டு தந்த காவல் குழுவினரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

Related Stories: