×

கே.பி.முனுசாமி கட்சி தலைமை பதவிக்கு ஆசைப்படுகிறார் அதிமுக சாதி கட்சியாக செயல்படுகிறது: பொன்னையன் குற்றச்சாட்டால் மீண்டும் பரபரப்பு

சென்னை: அதிமுக சாதி கட்சியாக செயல்படுவதாகவும், கே.பி.முனுசாமி கட்சி தலைமை பதவிக்கு ஆசைப்படுகிறார் என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையனும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் என்பவரும் தற்போதுள்ள அதிமுக அரசியல் நிலவரம் குறித்து பேசிய ஆடியோவை ஓபிஎஸ் தரப்பினர் நேற்று  முன்தினம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் பொன்னையன் அதிமுக கட்சி பற்றியும், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி பற்றி அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறார். இது தற்போது தமிழகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

அதிமுக கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் பொன்னையனே எடப்பாடி அணியில் தற்போது நடைபெற்று வரும் கூத்தை புட்டு புட்டு வைத்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் ஒருவழியாக பணத்தை செலவு செய்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பிடித்துள்ள நிலையில், இந்த ஆடியோவில் கூறப்பட்ட தகவல்களால் அதிமுக தொண்டர்களிடம் தனது செல்வாக்கு மேலும் குறையும் என்று எடப்பாடி கருதுகிறார். முக்கியமாக, அதிமுக தற்போது சாதி கட்சியாக செயல்படுவதாக பொன்னையன் கூறியுள்ளார். தங்கமணி, வேலுமணி ஆகியோர் தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் கொங்கு வோளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த 42 எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளதாகவும், சி.வி.சண்முகத்திடம் படையாச்சியர், வன்னியர் என 19 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் பொன்னையன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு வெறும் 9 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, கட்சி தலைமை பதவிக்கு கே.பி.முனுசாமியும் போட்டியிட முயன்றார் என்று கூறி இருப்பது எடப்பாடியை யோசிக்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ்சுடன் கே.பி.முனுசாமி இப்படித்தான் நெருக்கமாக இருந்தார். பின்னர் எடப்பாடி கை ஓங்கியதும் ஓபிஎஸ்சிடம் இருந்து விலகி எடப்பாடி பக்கம் சாய்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக கிடைக்கும்பட்சத்தில், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை அவர் இழப்பார். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பதவியை தனக்குத்தான் தர வேண்டும் என்று கே.பி.முனுசாமி எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

அதேநேரம், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை முக்குலத்தோர் ஒருவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியிடம் கூறி வருகின்றனர். இதனால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை கேட்டு முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்கள் போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி கிடைக்காவிட்டால், அதிமுக கொறடா பதவியாவது வேண்டும் என்று முனுசாமி கேட்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் தொடர்வதால், அதிமுக சாதி கட்சியாக மாறி வருவதாக, பொன்னையன் கூறுவது உண்மையாகி உள்ளது. அதேபோன்று, அதிமுக கட்சி தொண்டர்கள் மட்டுமே இரட்டை இலைக்கு பின்னால் நிற்பதாகவும், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி கொடுக்கும் பணத்துக்கு பின்னாடி நிற்பதாக பொன்னையன் உண்மையை போட்டு உடைத்துள்ளது அதிமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. பொன்னையன் ஆடியோவில் பேசியது தற்போது அதிமுகவில் நடைபெறும் உண்மை சம்பவத்தை தோலுரித்து காட்டியுள்ளதாக அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் கருதுகின்றனர்.

* இன்னும் தகவல் வரும்... கோலப்பன் எச்சரிக்கை
முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேசிய ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என்னை போன்ற யாரோ ஒருவரை பேச வைத்து, ‘மிமிக்ரி’ செய்து வெளியான ஆடியோ’’ என்று கூறியுள்ளார். ஆனால், உண்மையில் பொன்னையன் பேசிய ஆடியோ தான் என்று ஓபிஎஸ் அணியினர் அடித்து சொல்கின்றனர். மேலும், நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து இன்னும் நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். அதுபற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து, நாஞ்சில் கோலப்பன் கூறும்போது, மூத்த அதிமுக நிர்வாகி பொன்னையன் பேசியதுபோன்று, அதிமுகவில் பல நிர்வாகிகள் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அந்த தகவல்களையும் வரும் நாட்களில் வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதனால், எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சியில் யாரையும் வளர விடாமலும், தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவி வாங்கி கொடுத்து வருவதால் விரக்தி அடைந்துள்ளனர். அதுதான் இந்த ஆடியோ வெளியானதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

* ‘புரட்சி பயணம்’ செல்கிறார் ஓபிஎஸ்
கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. அது பொதுக்குழுவே அல்ல, ஒரு நாடகம் என்று கூறினர். மேலும், நிர்வாகிகள் அனைவரையும் எடப்பாடி பணம் கொடுத்து வாங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தையே ஆதரிக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 11ம் தேதி அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஆவணங்களை ஓபிஎஸ் எடுத்துச் சென்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ‘புரட்சி பயணம்’ செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்தித்து பேசுகிறார். அப்போது, அதிமுகவில் தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விளக்குவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

* எந்த பதவியும் இல்லை.. ஜெயக்குமார் அதிருப்தி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று நான்கு சுவற்றுக்குள் பேசியதை வெளியே வந்து போட்டு உடைத்தது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான். இதையடுத்துதான் கடந்த 14ம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் ஆனது. அதுவரை ஒற்றைத் தலைமை என்பது கற்பனையான விவாதம் என்றே எடப்பாடி கூறி வந்தார். ஒற்றைத் தலைமை பிரச்னையை டிவி நிருபர்கள் மூலம் தினசரி பேட்டி மூலம் தெரிவித்து, பூதாகரமாக்கியது ஜெயக்குமார் தான். அதன்படி, கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பதவிக்கு எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த கூட்டத்தில் கூட ஜெயக்குமாருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோன்று, கட்சியின் பொருளாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஜெயக்குமார் எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு ஜெயக்குமாருக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாததால், அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக பத்திரிகைகளுக்கு தினசரி பேட்டி கொடுக்கும் ஜெயக்குமார், கடந்த சில தினங்களாக பேட்டி எதுவும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : KP ,Munuswamy ,AIADMK ,Ponnaiyan , KP Munuswamy aspires for party leadership AIADMK acts as a caste party: Ponnaiyan allegation sparks furore again
× RELATED தமிழ்நாட்ல பாஜ தவழும் குழந்தை: கே.பி.முனுசாமி ‘பங்கம்’