மோசமான வானிலையால் அந்தமான் விமானம் சென்னை திரும்பியது

சென்னை: மோசமான வானிலை காரணமாக அந்தமான் புறப்பட்டுச்சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் செல்லும் தனியார் பயணிகள் விமானம், நேற்று காலை 184 பயணிகளுடன், அந்தமான் புறப்பட்டு சென்றது. விமானம் அந்தமானை நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மழைபெய்து கொண்டு, மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியாமல், நீண்டநேரமாக அங்கு வானிலே வட்ட மடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் வானிலை அங்கு சீரடையவில்லை.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அந்த விமானத்தை மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவிட்டனர். அதன்படி நேற்று பிற்பகலில் அந்த விமானம் மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. பயணிகள் சிறிதுநேரம் விமானத்துக்கு உள்ளேயே அமர்ந்திருந்தனர். ஆனால் அந்தமானில் வானிலை சீரடையவில்லை. தொடர்ந்து மோசமாக இருந்தது. மேலும் மாலை 4 மணிக்கு மேல் அந்தமானில் தரைக்காற்று அதிகமாக இருக்கும். எனவே எந்த விமானங்களும், தரையிறங்கவோ அங்கிருந்து புறப்படவோ முடியாது என்பதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனர்.

Related Stories: