×

அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ கியூஆர் ஸ்கேன்: திருப்பதியில் விரைவில் நடைமுறை

திருமலை: திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ கியூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஆரம்பத்தில் பணமாக மட்டும் செலுத்தினர். பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனையாக கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் பெறப்பட்டு வருகிறது.

இதில், பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகையை அறைகளை காலி செய்ததும் அடுத்த 24 மணி நேரத்தில், பக்தர்களின் வங்கிகளுக்கு தேவஸ்தானம் திருப்பி செலுத்தி விடும். ஆனால், வங்கியின்  செயல் நடைமுறையின் காரணமாக பக்தர்களுக்கு அந்த பணம் மீண்டும் செல்வதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிறது. இந்த அவகாசத்தை தவிர்க்கும் விதமாக, புதிய திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சோதனை முறையில்,  தங்கும் அறைகளை ஒதுக்கும்போது யுபிஐ கோட் ஸ்கேன் செய்து  பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம், பக்தர்கள் அறைகள் பெற  விரைவில் பணம் செலுத்தப்படுவதோடு, அறைகள் காலி செய்த பின்னர்  பக்தர்களின்  முன்வைப்பு தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் வரவேற்பை பொருத்து அறைகள், தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்து பண பரிமாற்றத்திற்கும் யுபிஐ க்யூஆர் கோடு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அமல்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tiruppati , UPI QR scan to prevent malpractices in getting rooms, darshan, lattu tickets: Implementation soon in Tirupati
× RELATED திருப்பதியில் தரிசனத்துக்கு 2 நாள் காத்திருக்கும் பக்தர்கள்