சென்னை: வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் சுமை பெட்டி வாடகை திட்டத்தின் மூலம் ஒரு ஊரின் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்கள் (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்) பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை, தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆக.3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்குஅருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கவும். பொது மக்கள் திருச்சி- சென்னை, மதுரை - சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.