என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கிடையே நடந்த போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்  திருவள்ளூர் நகராட்சி சார்பில் பாட்டுப்போட்டி மற்றும் சுவர் ஓவியப் போட்டி நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.  

அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அசத்தினர். அதே போல் பாட்டுப் போட்டியிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர்  சி.சு.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது,  மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்க வேண்டும். மாணவ, மாணவிகளாகிய உங்களிடம் இது போன்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லும் போது உங்கள் குடும்பத்தார் மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, நகரை தூய்மையாக வைத்திருக்க முடியும், என்றார்.  

இந்த நிகழ்ச்சியின் போது 22-வது வார்டுக்குட்ட பொது மக்களுக்கு நகர் மன்ற உறுப்பினர் சித்ரா விஸ்வநாதன் ஏற்பாட்டில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்து வழங்க ஏதுவாக 2 குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, அருணா ஜெய்கிருஷ்ணா, விஜயலட்சுமி கண்ணன், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி, துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: