×

திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் அன்சாரி (35). ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவலைத் தொடர்ந்து பரோலில் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு சிறைக்கு திரும்பவில்லை.

இதையடுத்து போலீசார் சுபாஷ் அன்சாரியை கைது செய்து திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று மாலை சுபாஷ் அன்சாரி சிறை அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சிறை அலுவலகம் நுழைவாயிலை ஒட்டி அமைந்து உள்ளது. திடீரென சுபாஷ் அன்சாரி நுழைவாயிலை தாண்டி வெளியே ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் உடனே அவரை விரட்டிச் சென்றனர்.

உடனே அருகில் உள்ள மகளிர் காப்பக வளாகத்திற்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறினார். தொடர்ந்து தனது மனைவி, குழந்தைகளை பார்க்க வேண்டும். உடனே விடுவிக்காவிட்டால் மரத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் மிரட்டத் தொடங்கினார். இது குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தின் கீழே வலை வலை விரித்தனர். மரத்தை விட்டு கீழே இறங்குமாறு பலமுறை போலீசாரும்,  தீயணைப்பு வீரர்களும் கூறியும் சுபாஷ் அன்சாரி கேட்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மேல் ஏறி அன்சாரியை கீழே இறக்க முயற்சித்தனர். அப்போது திடீரென மரக்கிளை உடைந்து அன்சாரி கீழே விழுந்தார்.

தீயணைப்பு வீரர்கள் தயாராக வலை விரித்திருந்ததால் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. உடனே சிறைக் காவலர்கள் அவரைப் பிடித்தனர். பின்னர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற சுபாஷ் அன்சாரி மீது பூஜப்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvananthapuram Central Prison , Thiruvananthapuram, Central Jail, Prisoner:, Suicide threat
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...