1.8 லட்சம் கன அடி நீர்வரத்தால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.37 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 1.8 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 98,208 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.37 அடி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை வலுத்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை மாநில எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. அப்போது, விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்து மாலை 60 ஆயிரம் கனஅடியானது. நேற்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.8 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு மேட்டூர் அணை நோக்கி காவிரி நீர் பெருக்கெடுத்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. இதையடுத்து, வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா போட்டும், ஒலிபெருக்கி மூலமும்  அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, காவிரி கரையோரங்களில் நின்று செல்பி எடுக்கவோ விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று காலை 50,576 கனஅடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 95,138 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 98,208 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று காலை 100.44 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.81 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.37 அடி உயர்ந் துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.57 டி.எம்.சியாக உள்ளது. அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள், நடப்பு ஆண்டில் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்தும் திறப்பும் இதேநிலையில் இருந்தால், இந்த வார இறுதிக்குள் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: