சென்னை தங்கசாலையில் உள்ள அரசு ஐடிஐ தரம் உயர்த்தப்படும்: எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி அறிவிப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: மழைகாலம் வருவதற்கு முன்பே மழைநீர், குடிநீரில் கழிவுநீர்  கலக்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும். சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். லாரிகளில் குடிநீர் வழங்குவதை நிறுத்தி மக்களின் வீடுகளுக்கு அருகே குடிநீர் குழாய்களை அமைத்து 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும்.

பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பது, கழிவுநீர் அடைப்பு ஏற்படாமல் இருப்பது, குப்பைகளை அகற்றுவது, மின் இணைப்பு முறையாக வழங்குவது, சாலைகள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுத்தால் ராயபுரம் ராயல்புரமாக  மாறும். ராயபுரம் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி வழங்கப்படும்.

வண்ணாரப்பேட்டை ராமதாஸ்நகர் பகுதியில் உள்ள பழுதடைந்த அரசு தொழில் பயிற்சி நிலையம் (ஐடிஐ) தரம் உயர்த்தப்படும். 3 கோடி ரூபாய் செலவில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.    மேலும்  40 தனியார் நிறுவனம் மூலம்   தொழில் பயிற்சி பயின்ற மாணவர்களுக்கு ஐடிஐயில் பயிற்சி அளித்து வேலை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும். தொழில் பயிற்சி படித்த மாணவர்களுக்கும், படித்து வேலையில்லாமல்  இருக்கும் மாணவர்களுக்கும் தனியார் நிர்வாகம் மூலம் நிரந்தர வேலை வழங்க  நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: