தஞ்சை அருகே கோயில் திருவிழாவில் பயங்கரம்: ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை: 2 பேர் கைது

வல்லம்: தஞ்சை அருகே கோயில் திருவிழாவில் ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மகன் சுபாஷ் சந்திரபோஸ்(27). இவர் மீதான கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவரது பெயர், போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. அதே பகுதியில் உள்ள சியாமளா தேவி கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதில் சுபாஷ் சந்திரபோசுக்கும், அவரது உறவினர்களான துலுக்கம்பட்டியை சேர்ந்த ஜோதி ராஜன் (37), திருவையாறை சேர்ந்த சிவகுமார் (33) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் தண்ணீரை ஊற்றி மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மஞ்சள் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து ஜோதிராஜன், சிவக்குமார் ஆகியோர் மீது ஊற்றியதுடன், தான் கொண்டு வந்த அரிவாளை காட்டி மிரட்டினார். தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த ஜோதிராஜன், சிவக்குமார் ஆகியோர் அரிவாளை எடுத்து வந்ததுடன் சுபாஷ் சந்திரபோஸ் வைத்திருந்த அரிவாளையும் பிடுங்கி வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன சுபாஷ் சந்திரபோஸ் ஓட முயன்றார். ஆனால் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் சுபாஷ்சந்திரபோஸ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திஜோதிராஜன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், 2019ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சாட்சியங்களை தயார் செய்ததாக ஜோதிராஜனை சுபாஷ் சந்திரபோஸ் மிரட்டினார். இந்த தகராறில் தான் சுபாஷ் சந்திரபோஸ் கொலை செய்யப்பட்டார்’ என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: