விராலிமலை அருகே பரபரப்பு: காவிரி கூட்டு குடிநீர் ராட்சத குழாய் உடைப்பு-பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது

விராலிமலை : குடிநீருக்காக காலிக்குடங்களை தூக்கி கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து அல்லாடும் இன்றைய காலக்கட்டத்தில் காவிரி குடிநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரை சிலர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதால் குடிநீருக்காக திண்டாடி வருபவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கடந்த 2 -ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது.

இருப்பினும், கடந்த 10 நாட்களாக கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிறிதாக இருந்த உடைப்பு மேலும் பெரிதாகி நேற்று அருவி போல தண்ணீர் ஆர்ப்பரித்து பீய்ச்சி கொண்டு வெளியேறியது.மதியம் 2 மணி அளவில் உடைப்பு ஏற்பட்ட இந்த குழாயிலிருந்து வெளியேறும் நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியது. இவ்வாறாக வெளியேறும் நீரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடங்களில் பிடித்து செல்கின்றனர்.

மேலும் அவ்வழியே பயணிப்போர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிய நிலையில் தற்போது ராட்சத குழாயின் வால்வில் ஏற்பட்ட உடைப்பு பெரிதானதால் இதுவரை பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாகி வெளியேறி இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் கேட்டப்போது கூறியதாவது:- ஏற்கனவே தினகரனில் மற்றும் சன் நியூஸில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். 24 மணி நேரமும் நீர் செல்லும் குழாயை மின்சாரம் இருக்கும் நேரத்தில் அவ்வளவு எளிதாக சரி செய்ய இயலாது. விராலிமலை பகுதியில் நேற்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் அதை பயன்படுத்தி வால்வை சரிசெய்யும் பணிக்காக மீதமுள்ள கிடப்பு நீரையும் வெளியேற்றி விட்டு இரவுக்குள் குழாய் சரிசெய்யப்பட்டு விடும் என்றார்.

Related Stories: