×

திமுக ஆட்சியில் தொடரும் அதிரடி கருங்கட்டான் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் ‘ரொம்ப ஸ்பீடு’

சின்னமனூர் : சின்னமனூர் அருகே கருங்காட்டான் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோயில் நிலம், நீர்நிலைகள் என அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுதது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கோயில் நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின், அமைச்சர்கள் மேற்பார்வையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள், நீர்நிலைகள் அதிரடியாக மீட்கப்பட்டு வருகின்றன.

சின்னமனூர் முத்துலாபுரம் சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு பகுதியில் சுமார் 230 ஏக்கர் அளவில் கருங்கட்டான்குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பாசன நீராக பலன் தரும் வகையில் உள்ளது. மழைக்காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரும் மற்றும் ஜூன் முதல் தேதியில் முல்லைப் பெரியாற்றில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக நெல் சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீரும் இங்கு வந்து சேருகிறது. இதனால், 8 மாதங்களுக்கு குளத்தில் தண்ணீர் தேங்கி நின்று விவசாயிகளுக்கு பயன் தருகிறது.

இந்த அகன்ற கருங்கட்டான்குளம் கருங்கட்டான், ஊத்துப்பட்டி, முத்தலாபுரம், ராமசாமி நாயக்கன்பட்டி ஆகிய 4 வருவாய் கிராமத்திற்குள் கட்டுப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊத்துப்பட்டி விலக்கிலிருந்து துவங்கி முத்தலாபுரம், ராமசாமி நாயக்கன்பட்டி வரையில் நீண்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த குளம் மிகவும் பிரமாண்டமானது. இந்தக் குளத்தை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்கிரமித்து சுமார் 100 ஏக்கர் அளவில் தென்னை, புளியம் மரம், இலவம் மரம் உள்ளிட்டவைகளை வளர்த்து தோப்புகளாக மாற்றி வைத்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திமுக ஆட்சியில் நீர்நிலைப் பகுதியில் உள்ள ஆக்கிரப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பொதுப்பணித்துறையினர் வருவாய்துறையுடன் சேர்ந்து மேற்படி குளத்தை அளவீடு செய்து கடந்த சில நாட்களாக ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உள்ளே செல்லச் செல்ல 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த 100 ஏக்கரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு பெரும் தோப்புகளாக நல்ல வருமானம் தரும் வகையில் மாற்றி வைத்துள்ளனர்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் அளவீடு செய்து மண்ணை தோண்டி எடுத்து கரைகள் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர். அதன்படி ஆக்கிரப்பில் இருக்கின்ற தென்னை மரங்கள் முழுவதும் பெயிண்ட் அடித்து அதில் வரிசையாக நம்பர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் இருக்கின்ற தென்னை மரங்கள் அனைத்துமே அந்தந்த கிராமங்களில் உள்ள கட்டுப்பாட்டில் விடப்பட்டு அதில் வரும் வருமானத்தை கிராம மற்றும் பொதுமக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அரசின் ஆவணப்படி 172 ஏக்கர் வரை கருங்கட்டான் குளம் உள்ளது. தற்போது 11 ஏக்கர் ஆக்கிரமிப்பினை மீட்டு கையகப்படுத்தி இருக்கிறோம். இங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முழுவதுமே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அரசின் வருமானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.’’ என்றார்.

அதிமுக ஆட்சியில் அலட்சியம்

அரசுக்கு பெரும் வருமான இழப்பு

சின்னமனூர் பகுதியில் 4,000 ஏக்கர் அளவில் இரு போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த குளம் சுருங்கி விட்டதால் பாசனநீர் தேக்குவதில் சிக்கல் நீடித்து விவசாயத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து பலமுறை கருங்கட்டான்குளத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி முழுமையான குளமாக மாற்ற வேண்டும் என புகாரளித்தனர்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதிகாரிகளின் அலட்சியபோக்கால் ஆக்கிரப்புகள் அகற்றப்படவில்லை. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அறிந்தும், கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகளோ, மின்சாரத்துறை அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீதிகளை மீறி போர்வெல் அமைப்பதற்கும், மின்சார வசதிகளை வழங்கி ஒத்துழைப்பு அளித்து அரசிற்கும், விவசாயிகளுக்கும் பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Tags : Kanjagar , Chinnamanur: The public works department has intensified the work of encroachment removal in Karungatan pond near Chinnamanur
× RELATED தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள்...