×

அஞ்சலியின் காதல் காமிக்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

காதலர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன குறும்புகளையும், விளையாட்டையும் காதலும் காமெடியும் பொங்க காமிக்ஸ் போஸ்ட்களாக உருவாக்கி வருகிறார் 28 வயதாகும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா.

இவருடைய கருப்பு-வெள்ளை காமிக்ஸ் கீற்றுகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கலை மூலம் பல காதலர்களின் ஃபேவரைட் வரைகலை நிபுணராக இருக்கும் அஞ்சலியிடம், அவருடைய காதல் கதையைக் கேட்டோம்.“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் வாரணாசியில். பி.ஏ நுண்கலையில் பட்டம் பெற்று ‘UX designer’ஆக இத்துறையில் ஏழு வருடங்களாக பணியாற்றி வருகிறேன். சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் படிப்பதிலும் வரைவதிலும்  ஆர்வம் இருந்தது. அதே போல, நன்றாக வரையவும் செய்தேன். இதனால் என் விருப்பம் சார்ந்த துறையிலேயே படித்தும் முடித்தேன். இப்போது பெங்களூரில் வசித்து வருகிறேன்.

எனக்கு ட்ராவல் செய்வது ரொம்ப பிடிக்கும். ஒரு முறை பெங்களூரில் ட்ரெக்கிங் போன போது, அந்த பயணத்தை ஒருங்கிணைத்திருந்த கே.டி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சுற்றுப் பயணம் முடிந்ததும், இருவரும் தொடர்பிலேயே இருந்தோம். சில மாதங்களுக்குப் பின் நல்ல நண்பர்களானோம். இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்களில் விருப்பமும், ஆர்வமும் இருப்பதை உணர்ந்தேன். எங்களுக்குள் நல்ல இணக்கமும் புரிதலும் படிப்படியாக உருவானது.

இதை கே.டியும் உணர்ந்திருந்தார். அப்படியே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.ஒரு நாள், நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சியை காமிக்ஸ் கதையாக ஒரு பேப்பரில் வரைந்தேன். அதைப் பார்த்த கே.டி என்னை ரொம்பவே பாராட்டி, இதை டிஜிட்டல் வரைகதைகளாக உருவாக்கி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றச் சொன்னார். அந்த முதல் பதிவுதான் அஞ்சலி காமிக்ஸ் உருவாகக் காரணம்.

என் வேலைக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில் எல்லாம் காமிக்ஸ் கீற்றுகளை வரைய ஆரம்பித்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வந்தேன். எனக்கும் கே.டிக்கும் நடுவே நடக்கும் சின்னச் சின்ன நகைச்சுவை தருணங்களை காமிக்ஸ் ஸ்டிர்ப்பாக உருவாக்கிப் பதிவேற்றினேன். ஒருமுறை கே.டி முடிதிருத்த வேண்டும் எனக் கூறினார். அதை நானே முயற்சித்துப்பார்க்க முடிவுசெய்து, அவருக்கு முடி வெட்டிவிட்டேன்.

ஆனால் தவறுதலாக அதிகமாக முடிவெட்டியதால் முழுவதுமாக கே.டிக்கு மொட்டையடிக்க வேண்டியதாயிற்று. இந்த வரைகதை கீற்றுக்கு பலத்த வரவேற்பு பெற்றது. பல காதலர்களும் எங்களை பின் தொடர ஆரம்பித்தனர். எங்களுடைய காமிக்ஸ் கதாப்பாத்திரம் அவர்களுக்கு அப்படியே பொருந்துவதாக தெரிவித்தனர்.

எங்கள் புகைப்படங்களை வெளியிடாததிற்கு முக்கிய காரணமும் இதுதான். எங்களுடைய புகைப்படங்களைப் பார்த்ததும், அந்த காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் எங்களின் முகங்கள்தான் தெரியும். ஆனால் அஞ்சலி காமிக்ஸை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய காதல் தருணங்கள் தான் நினைவுக்கு வர வேண்டும். அதனால் எங்களுடைய புகைப்படங்களையும், விவரங்களையும் இன்னும் வெளியிடாமலேயே இருக்கிறோம்.

மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமில்லாமல், எங்களுக்குள் நடக்கும் சண்டைகள், விவாதங்களையும் கூட பதிவு செய்துள்ளோம். இதனால் எவ்வளவு அழகான புரிதல்களுடன் இருக்கும் காதலிலும் சின்ன சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் உருவாவது வழக்கம்தான். அந்த சமயங்களில் ஒருவரை மற்றவர் காயப்படுத்தாமல், மீண்டு வருவதுதான் ஆரோக்கியமான உறவுமுறையாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் பல காமிக்ஸ் படங்களை உருவாக்கியுள்ளோம்.

நானும் கே.டியும் ரொம்ப நகைச்சுவையான மனிதர்கள். இருவருக்குமே ட்ராவல் ரொம்ப பிடிக்கும். மற்றவரை எப்போதுமே கேலி செய்து விளையாடுவதும் பிடிக்கும். காதலுக்குப் பின்னும், நாங்கள் நாங்களாக இருப்பதால்தான் எங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பாசிட்டிவிட்டியும் நிறைந்திருக்கிறது. வெவ்வேறு பழக்கங்களும் விருப்பங்களும் கொண்ட இருவர் இணையும் போது, தங்களுக்கான உலகத்தை அவர்களே சேர்ந்து உருவாக்க வேண்டும். ஒருவரின் பொழுதுபோக்கில், விருப்பங்களில் மற்றவரும் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். நிறையப் பேசுங்கள், மற்றவர் பேசும் போது பொறுமையாகக் கவனியுங்கள், சண்டைகள் தீர்ந்ததும் மன்னிப்பு கேளுங்கள்.

காதலின் ஆரம்பத்தில் ஏற்படும் உற்சாகம், நேரம் கடந்த பின் குறைந்துபோகும். அப்போது அன்பு, புரிதல், நம்பிக்கை, ஒற்றுமை போன்ற அம்சங்கள்தான் உங்கள் காதலை நிலைநிறுத்தும். சமூக வலைத்தளத்தில் என்னை பின் தொடருபவர்களை, ரசிகர்களாக இல்லாமல் என்னை ஆதரிக்கும் குடும்பமாகத்தான் பார்க்கிறேன். பல காதலர்களுக்கு என்னுடைய காமிக்ஸ், அவர்களுக்குள்ளான இக்கட்டான சூழ்நிலையிலும் காதலின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர, கடினமான சூழ்நிலையிலிருந்து மீள உதவ வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

என்னுடைய காமிக்ஸ் படங்களைப் பார்க்கும் காதலர்கள், இதை தங்களுடன் எளிதில் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அஞ்சலி காமிக்ஸ் பக்கத்தை இயக்கி வருகிறேன். இதற்குக் கிடைக்கும் வரவேற்பு நான் துளியும் எதிர்பார்க்காதது. அஞ்சலி காமிக்ஸ் உருவாக முழு காரணமும் கே.டிதான். அவருடைய ஊக்கமும் நம்பிக்கையும்தான் என்னை இன்று பலருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி எதிர்காலத்தில் எங்கள் வரைகதை கீற்றுகளை ஒரு புத்தமாகத் தொகுத்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். சமூக வலைத்தளத்தில் பலரும் விரும்புவதும் அதைத்தான். காதலர்கள் பலர் இதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இருப்பதால் அதை புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது’’ என்று தெரிவித்தார் அஞ்சலி.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Anjali ,
× RELATED கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின்...