கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்தி ஆதாரமற்றவை : இந்திய தூதரகம்

கொழும்பு :இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் சீரழிந்ததால் ஆவேசம் கொண்ட போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அதிபர் மாளிகையை கைபற்றினர். பிரதமர் ரணிலின் வீடும் தீக்கரையாக்கப்பட்டது. முன்னதாக தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்றைய தினம் பதவி விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அன்டோனோவ் 32 ரக ராணுவ ஜெட் விமானத்தில் கோத்தபய அவரது மனைவி லோமா, பாதுகாவலர் மற்றும் ஒருவர் என 4 பேர் மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றதக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத பயணத்திற்கு உதவிய ஏர் மார்ஷல் சுதர்ஷன கரகோடா பதிரான மீது வழக்கு தொடரப்படும் என கூறப்படுகிறது. மாலத்தீவு தலைநகர் மாலேவை அதிகாலை 3 மணி அளவில் கோத்தபய அடைந்தது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:“அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories: