ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? : ஜவாஹிருல்லா பாய்ச்சல்!

சென்னை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது என்று  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்‌.முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்க உள்ளார். பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சரை ஆலோசிக்காமல் மதுரைகாமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகளை ஆளுநர் அறிவித்தது கண்டனத்திற்குரியது. மாநிலஅரசின் உரிமைகளைத் தொடர்ந்து புறந்தள்ளும் வகையில் ஆளுநர் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

பல்கலைக்கழக வளாகங்களை தன்னுடைய கொள்கை சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக ஆளுநர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். கல்வியாளர் இல்லாத ஒரு அரசியல் பிரமுகரைத் தன்னிச்சையாக ஆளுநர் பட்டமளிப்புவிழாவிற்கு கவுரவ விருந்தினராக அழைத்திருப்பதுடன் பல்கலைகழக இணை வேந்தருக்கு உரிய நடைமுறை மரியாதையை அளிக்க மறுத்திருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது.  ஆளுநர் ரவி தனது செயல்பாடுகள் வாயிலாகப் பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை  பரப்புசெயலாளராக ஆளுநர் செயல்பட்டு வருவது மீண்டும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதனம் குறித்துப்பேசியதும், பின்னர் திராவிடம் குறித்து பேசியதும் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்தற்போது மீண்டும் தமிழக அரசைச் சீண்டுகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டமன்றம்நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டுத் தொடர்ந்து தனதுஅதிகாரப் போக்கை மீறிவரும் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: