உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் 'ஜேம்ஸ் வெப்'சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள் வெளியீடு

வாஷிங்டன்: பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தை அற்புதமாக படம் பிடித்திருப்பதை நாசா வெளியிட்டது. உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் இந்த சாதனையை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.ஐ ரோப்பா, கனடா விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை ரூ.79.6 ஆயிரம் கோடியில் நாசா உருவாக்கியது.

உலகின் மிகப் பெரிய இந்த தொலைநோக்கி, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப்படத்தை அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார். இதற்குமுன் இப்படிப்படம் எடுக்கப்பட்டது இல்லை. இதில், ‘பிரபஞ்சம் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் புள்ளிகள், கோடுகள், சுருள்கள், சூழல்கள் என வண்ணமயமாக காட்சி அளிக்கிறது,’ என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்றைய கூகுளின் முகப்பு பக்கத்தில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும், அதன் மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

Related Stories: