கோத்தபய ராஜபக்சே, மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம் : பிரதமர் அலுவலகம், இலங்கை விமானப் படை அறிவிப்பு

கொழும்பு : இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில், 2 நாள் அலைக்கழிப்பிற்கு பிறகு இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு அதிகாலையில் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் சீரழிந்ததால் ஆவேசம் கொண்ட போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அதிபர் மாளிகையை கைபற்றினர்.பிரதமர் ரணிலின் வீடும் தீக்கரையாக்கப்பட்டது. முன்னதாக தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்றைய தினம் பதவி விலகுவதாக அறிவித்து இருந்தார். அவர் வெளிநாடு சென்றதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபே வர்த்தன தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தை அதிகாரி மூலம் அவைத் தலைவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.அவரது இளைய சகோதரர் பசில் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த போது, மக்களின் எதிர்ப்பால் பயணம் தடைபட்டது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அதே விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துபாய்க்கு பயணிக்கஅவர் விரும்பியுள்ளார். ஆனால் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் செல்லும் வழியில் போகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வழியாகச் சென்றால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சி காத்திருந்த கோத்தபய உள்ளிட்டோர் 4 விமானங்களை தவறவிட்டனர்.    

இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் பயணிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடல் வழியாக செல்ல எண்ணி மீண்டும் கடற்படை தளத்திற்கு கோத்தபய சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அன்டோனோவ் 32 ரக ராணுவ ஜெட் விமானத்தில் கோத்தபய அவரது மனைவி லோமா, பாதுகாவலர் மற்றும் ஒருவர் என 4 பேர் மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றதக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத பயணத்திற்கு உதவிய ஏர் மார்ஷல் சுதர்ஷன கரகோடா பதிரான மீது வழக்கு தொடரப்படும் என கூறப்படுகிறது. மாலத்தீவு தலைநகர் மாலேவை அதிகாலை 3 மணி அளவில் கோத்தபய அடைந்தது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories: