×

ஜப்பானில் சுட்டு கொல்லப்பட்ட ஷின்சோ அபேவுக்கு மக்கள் பிரியாவிடை: புத்த மடாலயத்தில் இறுதிச்சடங்கு

டோக்கியோ: ஜப்பானில் தேர்தல் பிரசாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கு டோக்கியோவில் நேற்று நடந்தது. ஜப்பானில் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷின்சோ அபே பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராவார். இவர் நாராவில் நடந்த நாடாளுமன்ற மேல்சபை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் ராணுவ வீரரால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஜப்பானில் இது நடந்திருப்பது சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அபேயின் இறுதி சடங்கு நேற்று தலைநகர் டோக்கியோவில் உள்ள சோஜஜி புத்த மடாலயத்தில் நடந்தது. இதில், அவரது மனைவி அக்கி அபே, குடும்பத்தினர், உறவினர்கள், பிரதமர் கிஷிடா, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஷின்சோ கடந்த 1991ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி உள்ளார். இதனால் முதலில் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் அங்கிருந்து மடாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்று ஷின்சோவுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Tags : Shinzo Abe ,Japan , People bid farewell to Shinzo Abe, shot dead in Japan: Funeral at Buddhist monastery
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...