×

ஜனாதிபதி தேர்தலில் திருப்பம் பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம் திடீர் ஆதரவு: நட்புக்கரம் நீட்டுகிறார் சந்திரபாபு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது. ஒன்றிய அரசிலும் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் இடம் பெற்றனர். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிக நெருக்கமாக இருந்த சந்திர பாபு, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்து தோற்றார். மோடியை கடுமையாக விமர்சித்தார். அவருக்கு எதிராக 2019 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க முயன்று தோற்றார்.

இந்நிலையில், பாஜ உடனான நட்பை புதுப்பித்தால் மட்டுமே அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்வு கிடைக்கும் என அவர் கருகிறார். அதற்கு முன்னோட்டமாக, ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு நேற்று திடீரென அவர் ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை தெலுங்கு தேசம் கட்சி வலுப்படுத்தியுள்ளது. அதேபோன்று, பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்முவை தெலுங்கு தேசம் ஆதரிக்கும்’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஆந்திராவில் பாஜ.வுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க சந்திரபாபு காய் நகர்த்துவதாக கருதப்படுகிறது.

* பாஜ என்ன செய்யும்?
சமீபத்தில், ‘ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பவன் கல்யாணுடன் கூட்டணி அமைக்க தயார்’ என சந்திரபாபு பேசினார். தற்போது பாஜ.வுடன் நெருக்கமாக உள்ள கல்யாணும், ‘ஜெகன் மீண்டும் ஆட்சியமைக்கக் கூடாது. அதற்காக யாருடனும் கூட்டணி சேர தயார்’ என கூறி வருகிறார். இதன் மூலம், பாஜ.வுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு தயாராகி விட்டதாக கருதப்பட்டாலும், ஜெகனை கழற்றிவிட்டு சந்திரபாபுவை பாஜ ஏற்குமா என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Tags : Telugu Desam ,Tirupam ,BJP ,Murmu ,election ,Chandrababu , Telugu Desam's sudden support for Tirupam BJP candidate Murmu in presidential election: Chandrababu extends hand of friendship
× RELATED பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர்...